தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். 70 வயது நிறைவடைந்து 71-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளம் மூலமாக மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்திடன் வாழ வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன்’ என கூறியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், ‘சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன’ என கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal