விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது. எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள்.

இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள். பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal