தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருபெரும் திராவிட கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். இதில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களிடம் ‘கட்சிக்கு நிதி’யாக ‘15’ கேட்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பிலோ, ‘20’வது வைத்திருக்கிறீர்களா? என கேட்கிறார்களாம்.

‘‘சீட் கிடைத்தால் சந்தோஷம்… சீட் கிடைக்காவிட்டால் ரெட்டை சந்தோஷம்’’ என மன ரீதியிலான முடிவுக்கு வந்துவிட்டார்கள் இரண்டு கழகத்திலும் சீட்டுக்கு எதிர்பார்த்து காத்திருந்தவர்கள்!

அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் தலைமையில் இருந்து ‘விட்டமின்’ கொடுக்கப்படும். தி.மு.க.வைப் பொறுத்தளவில், வேட்பாளர்களிடமிருந்து ‘விட்டமின்’ கறக்கப்படும் இதுதான் நடந்து வருகிறது. அப்படியில்லாவிட்டால் ‘விட்டமின்’ வைத்திருக்கும் வேட்பாளர்களை தி.மு.க. களமிறக்கும்! இந்த நிலையில்தான் தற்போது இரண்டு கழகங்களிலுமே, ‘சீட் கிடைத்தாலும் சந்தோஷம்… சீட் கிடைக்காவிட்டாலும் சந்தோஷம்…’ என்கிற ரீதியில்தான் வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் செலவு செய்ததை வெற்றி பெற்றாமல் கூட எடுக்க முடியாது.

தவிர, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் கழக கண்மணிகளின் எண்ணவோட்டங்கள் ஒரு போதும் நிறைவேறாது. இந்த நிலையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு பற்றி பார்ப்போம்.

அதாவது, மக்களவைத் தேர்தலில் திண்டுக் கல் தொகுதியில் நிறுத்துவதற்கு இளம் வேட்பாளரை திமுகவும், தொழிலதிபரை அதிமுகவும் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ப.வேலுச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே என அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதனால் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட திமுக நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருப்பதால் எப்படியும் நம்மை வெற்றி பெறச்செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பலரும் திமுகவில் சீட் கேட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளரை தேர்வு செய்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரின் ஒப்புதலுக்கு பின்பு, கட்சித் தலைமைக்கு வேட்பாளரை பரிந்துரை செய்ய உள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக போட்டியிட்டது.

இந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் அதிமுக நேரடியாக களம் இறங்க உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இங்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவ நாதன் ஆகியோரின் வாரிசுகளில் ஒருவரை களமிறக்க பொதுச் செயலாளர் பழனிசாமி விருப்பம் தெரிவித்த போதும், இருவரும் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காரணம் யார் செலவு செய்வது—…?

இதையடுத்து முன்னாள் மேயர் மருத ராஜின் வாரிசையோ அல்லது வேட சந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரம சிவத்தையோ களமிறக்கலாம் என்று பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், அவர்கள் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய அதிமுக அனுதாபிகளாக உள்ள தொழிலதிபர்களை தேடத் தொடங்கியுள்ளனர். இதில் கிரஷர் உரிமையாளர் ஒருவரிடமும், நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடமும் அதிமுகவினர் பேசி வருகிறார்களாம்.

இப்படி அ.தி.மு.க.வில் காசு இருக்கும் தொழிலதிபர்களையும், தி.மு.க.வில் கட்சிக்கு தாராளமாக நிதி கொடுக்கும் வேட்பாளரையும் தேர்வு செய்வதால், தெறித்து ஒடுகிறார்களாம் வேட்பாளர்கள்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal