தி.மு.க.வுடன் நடந்து வரும் தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் சின்னம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி ம.தி.மு.க.வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த முறையை போல் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என மதிமுக தரப்பு உறுதியாக நிற்பதால், வைகோவையும், துரை வைகோவையும் சமாதானம் செய்வதற்கான வேலைகளில் திமுக இறங்கியுள்ளது. மதிமுகவை பொறுத்தவரை 2+1 என்ற ரீதியில் இரண்டு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் கேட்கிறது. திமுகவோ ஒரு மக்களவைத் தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் எனக் கறார் காட்டியது.

இந்த பஞ்சாயத்து முதலமைச்சர் ஸ்டாலின் வரை சென்றதால், வைகோவுக்காக மதிமுகவுக்கு 1 + 1 ஒதுக்க முன் வந்திருக்கிறார் ஸ்டாலின். தொகுதி பங்கீடு காரணமாக கூட்டணியில் சிறிய சலசலப்பு கூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார் ஸ்டாலின். அதனால் தான் மதிமுகவுக்கு கடந்த முறையை போலவே 1+1 கொடுத்துவிடுவோம் என்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார். இதனிடையே மதிமுக தரப்பிலோ 2 மக்களவைத் தொகுதிகளை கேட்பதோடு பம்பரம் சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் இருக்கிறது.

இதனால் என்.ஆர். இளங்கோ மூலம் மதிமுகவை சேர்ந்த முக்கிய வழக்கறிஞர் ஒருவர் வாயிலாக வைகோவையும், துரை வைகோவையும் சமாதானம் செய்யும் படலம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாம் 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்தியில் கூறியிருந்ததை போல், வைகோ கடும் அப்செட்டில் இருப்பது மட்டும் உறுதி என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் பம்பரம் சின்னத்தின் அடையாளத்தை வரும் காலத்தில் தேர்தல் ஆணையத்தில் இழந்துவிடுவோமா என்பது தான் வைகோ மற்றும் துரை வைகோவுக்கு உள்ள கவலைக்குரிய விஷயமாகும்.

விசிக பானை சின்னத்தில் போட்டியிடுகிறது, முஸ்லீம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது, மதிமுக மட்டும் ஏன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது இவர்களது கேள்வியாக உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கும் சூழலிலும் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவில் மனம் கோணாமல் கலந்துகொண்டார் வைகோ. அநேகமாக இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்படும்.

இதற்கிடையே திருச்சி தொகுதிக்கு பதில் திண்டுக்கல் தொகுதி மீது மதிமுக தனது பார்வையை திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம், திருச்சி தொகுதிக்கு காங்கிரஸ் பிரமுகர் அடைக்கல்ராஜின் மகன் காய்நகர்த்துகிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal