தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்ததாக 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது.

இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன் வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைக்கேடு வழக்கில் இன்று (பிப்.26) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும், 1 மாதத்தில் தினமும் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற விசாரணைக்கு அமைச்சர் தினமும் ஆஜராக வேண்டும் எனவும், மேலும் ஒரு லட்ச ரூபாய் பிணையத் தொகையை நேரில் கட்டவேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட 6 மறு ஆய்வு வழக்குகளில், முதல் வழக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணை முழுவதும் முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal