தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகள் உறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடுதான் அக்கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. தனித்துவிடப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் கசிகிறது.

அதாவது, தி.மு.க.விற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் இந்திய கூட்டணி வேகமான கூட்டணி பகிர்வு முடிவுகளை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இந்த முறை 3வது அணி புதிதாக ஒன்று உருவாக்கி நாம் தமிழரோடு சேர்த்து 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக – காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் தனித்து நிற்க உள்ளது.

இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 27ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும். உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். மோடி வருகைக்கு முன் கூட்டணி இறுதியாகிவிடும்.

பாமக, தேமுதிக, இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வருகின்றன. அதன்படி பாமக 10 சீட், தேமுதிக 4 சீட், என்று பாஜக கூட்டணிவர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை. ராஜ்ய சபா சீட் கிடையாது மாறாக ‘விட்டமின்’ கேட்டதில் மூன்றில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம்.

பாமக -10, தேமுதிக -4, டிடிவி தினகரன் -4, ஓபிஎஸ் -2 ,பாஜக ,- 11 ஐஜேகே-1 , மற்றவை-2 புதிய தமிழகம் -2 தமிழ் மாநில காங்கிரஸ் -2 என்று கூட்டணி முடிவாக உள்ளதாம். இதனால் அதிமுக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. முக்கியமாக புதிய தமிழகம் கூட பாஜக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது. இது அதிமுகவிற்கு சிக்கலாக மாறி உள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal