நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ‘பாசிசம் வீழட்டும்’ என தி.மு.க. சார்பில் மாபெறும் பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட முசிறியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முசிறி எம்.எல்.ஏ.வும், வடக்கு மாவட்டச் செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொன்முடி முன்னிலையிலேயே தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர், ‘அண்ணன் பொன்முடிக்கு தெரியும் அவரது மகன்தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடப் போகிறார். அடுத்தது அண்ணன் நேருவின் மகன் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்தது எ.வ.வேலு மகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மகன் போட்டியிடுகிறார்கள்.

வேற யாருமில்லை… எல்லாம் நம்ம பசங்கதான்… ஏன். நம்ம பசங்க வரக்கூடாதா? எவன் எவனோ வர்றான்…’’ என்று உரக்கப் பேசினார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு சிரித்துக்கொண்டே பேச்சை ரசித்தார். இந்த விவகாரம்தான் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

இது பற்றி மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், இப்படி அமைச்சர்களின் மகன்களுக்கே சீட் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சியில் கடைக்கோடியில் உழைத்துக்கொண்டிருக்கும் நாங்கள் கடைசியில் தெருக்கோடியில்தான் நிற்க வேண்டும். அ.தி.மு.க.வில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, சாதாரண ஒன்றியச் செயலாளரும், கிளைச் செயலாளரும் எம்.பி. ஆன வரலாறு உண்டு. ஆனால், தி.மு.க.வில் வாரிசு அரசியல்தான் தலைதூக்குகிறது. மேலிடத்திலும் சரி, கீழ்மட்டத்திலும் சரி’’ என்றனர்.

பெரம்பலூர் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை காலம் காலமாக அ.தி.மு.க.வில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக களமிறக்கப்பட்டு வருகிறார். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவில் தோற்கும் நிலையில் இருந்தால் முத்தரையரை நிற்கவைத்து, அவரை தோற்கடித்து கடைசியில் இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுகின்றனர். மைனாரிட்டியாக இருக்கும் சமுதயாத்தினருக்குக் கூட எம்.பி.யாக வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கக்கூடிய முத்தரையர்களை தி.மு.க. தலைமை புறக்கணிக்கிறது.

தி.மு.க.வில் வெற்றி பெற வாய்ப்பிருக்கும் பட்சத்தில் ரெட்டியார், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த முறை தி.மு.க.வில் பெரம்பலூர் தொகுதி முத்தரையருக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் வாக்குகளை யாருக்குப் போடவேண்டும் என தேர்தல் நாளன்று முடிவெடுப்போம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal