தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ‘நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன். பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது.
இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன். கட்சிக்குள் ஏதாவது பிரச்சனைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை’. இவ்வாறு அவர் கூறினார்.