வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வில் சில சீனியர்களுக்கு சீட் இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் உதயநிதி. அதே போல், அதிருப்தியில் இருக்கும் சிட்டிங் எம்.பி.க்கள் சிலருக்கும் கல்தா கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் திமுக நடத்திய ‘ரகசிய சர்வே’ முக்கியப் பங்கு வகிக்கிறது.

திமுக நடத்திய ரகசிய சர்வேயில், வடசென்னை கலாநிதி வீராசாமி, சேலம் பார்த்தீபன், திருநெல்வேலி ஞானதிரவியம், வேலூர் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, திருவண்ணாமலை அண்ணாதுரை ஆகியோர் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களுக்கு மீண்டும் திமுக தலைமை வாய்ப்பு தருமா என்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது.

அதேபோல், தர்மபுரி தொகுதி எம்பி செந்தில்குமார், வட மாநிலம் குறித்து பேசியதும் அரசு நிகழ்ச்சியில் சாமி படம் இருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் சர்ச்சையானது. இதனால் ‘இம்முறை அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது’ என, திமுக சீனியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் தொடர்ந்து பழனி மாணிக்கத்துக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே சொல்கின்றனர். பொள்ளாச்சி தொகுதி எம்பியாக இருக்கும் சண்முக சுந்திரமும் மீண்டும் வாய்ப்புக் கேட்டு வருகிறார். ஆனால், அவரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லாததால் மீண்டும் அவருக்கு வாயப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இம்முறை வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இளைஞர் அணி மாநாட்டு மேடையிலேயே ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஐடி விங் மற்றும் இளைஞர் அணியில் இருந்து சிலரது பெயர்களை அவர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் தேர்தலில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல்களும் கசிகிறது. வயது முதிர்வின் காரணமாக டி.ஆர்.பாலுவை ராஜ்யசாபா எம்.பி.யாக தேர்வு செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறாராம்.

தவிர, உதயநிதியின் தலையீட்டால், டெல்லியில் திமுகவின் முகமாகச் செயல்படும் சீனியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக, சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இருக்காது. இதனால், சொந்தக் கட்சியில் சர்ச்சை வெடிக்கலாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal