பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், திடீரென்று தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியை திருமாவளவன் கேட்பதுதான் அருண் நேரு தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகியிருந்தது. இந்த நிலையில்தான், பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர், தா.பேட்டை, குளித்தலை, முசிறி, துறையூர், உப்பிலியபுரம், சோபனபுரம் போன்ற பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு முறை சென்று வருகிறார் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு.
சமீபத்தில் கூட சோபனபுரத்தில் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்விற்கு சென்றிருந்தார் அருண்நேரு. காரணம், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், சாதாரண நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்களுக்குக் கூட சென்றுவந்தார். குறிப்பாக மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி, உப்பிலியபுரம் போன்ற பகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர். பெரம்பலூர் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கக்கூடிய சக்தியாக விளங்குபவர்கள் முத்தரையர்கள். அதனால்தான், தான் சார்ந்த சமுதாயமான ரெட்டியார் சமுதையத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட முத்தரையர் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.
இந்த நிலையில்தான் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதியைக் கேட்கிறது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் பொதுத் தொகுதியைக் கேட்கிறார் திருமாவளவன்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சீகாமணி சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார். இவர் மீது வழக்குகள் இருந்தாலும், மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் கௌதம சீகாமணிதான் போட்டியிட இருக்கிறார். இதனால், கள்ளக்குறிச்சி தொகுதியை தி.மு.க. கொடுக்க வாய்ப்பில்லை.
இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதியை குறி வைத்து காய்நகர்த்தி வருகிறார் திருமாவளவன். ஏற்கனவே பா.ஜ.க. சார்பில் ‘பசையுள்ள’ வேட்பாளர் ரவி பச்சமுத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இவருக்கும் கொஞ்சமும் சளைக்காத வகையில் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவை களத்தில் இறக்க ஆயத்தமாகிவிட்டார் திருமா! இவர் ‘விட்டமின்களை’ வாரியிறைப்பதில் தயங்கமாட்டார் என்பதால், வெற்றியும் எட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதியை குறிவைத்து காய்நகர்த்தி வந்த அருண்நேருவுக்கு திருமா மூலம் ‘செக்’ வைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.
அடுத்தமாதம் முதல்வாரத்தில் தேர்தல் தேதி அறிவித்தவுடன்தான், கூட்டணிக் கட்சிகளின் தொகுதியும் இறுதி வடிவம் பெறும். அதுவரை யாருக்கும் எதுவும் நிரந்திரமில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!