தமிழகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்துகொள்ள வரும் பிப்ரவரி 29-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படாது என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அனுமதி அற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணைகளில் விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் விண்ணப்பிக்க காலஅவகாசம் பிப்ரவரி 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்படி மனையானது, அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனை உட்பிரிவில் அமைந்திருந்தால், அவற்றைwww. Tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

2016, அக்டோபர் 20ம் தேதிக்கு முன் கிரையம் செய்யப்பட்டுள்ள மனைகளுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும் என்பதால் மனை வரைபடம், கிரையம் பத்திரம் நகல், பட்டா, வில்லங்க சான்று, எப்.எம்.பி., ஆகியவற்றுடன், நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் சமர்ப்பித்து, வரன்முறைப்படுத்த அனுமதி பெற வேண்டும். தவறும் பட்சத்தில், மனை பதிவு செய்யபடமாட்டாது. குடிநீர், மின் இணைப்பு மற்றும் கட்டட அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்துகொள்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரை அளித்தது. அதன்படியே வரும் பிப்ரவரி 29-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குமேல் காலஅவகாசம் நிச்சயம் வழங்கப்படாது.

வீட்டுவசதித் துறையில் பயனாளிகளின் குறைகள், புகார்களைப் பெற 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைத்துள்ளோம். அதில் சுமார் 5,000 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதிலும் 60 இடங்களில் வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள 10,000 வீடுகள் இடிக்க உள்ளோம். மேலும் அங்கு தேவை அடிப்படையில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்ட முடிவு செய்துள்ளோம்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட, 3,000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அவற்றை வாடகை அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையான திட்டமிடலின்றி வீடுகளைக் கட்டியதால், அவை விற்பனையாகாமல் உள்ளது” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal