அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அப்போது தி.மு.க. & விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான மோதல்களும் நிகழ்ந்தன.

இந்த நிலையில்தான் விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவரான அவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனாவுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவரை விசிக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட வைக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த 12-ம்தேதி திமுகவுடனான பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் 2 தனித் தொகுதியும் ஒரு பொதுத் தொகுதியும் வழங்க வேண்டும் என விசிக உறுதியாக தெரிவித்தது.

அதன்படி, பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சியில் ஏதேனும் ஒரு தொகுதியில் ஆதவ் அர்ஜூனா நிறுத்தப்படலாம் என தெரிகிறது. லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுமா என அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், கடந்த முறை ஒதுக்கப்பட்டதுபோல் இரண்டு தொகுதிகள் ஒதுக்குவதற்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் திருமாவளவன். இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கினால்¢ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கூடுதலாக கேட்கும். எனவே, கடந்த முறை ஒதுக்கியது போல் வி.சி.க.வுக்கு இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

ஆனால், வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் பொது தொகுதியில் அர்ஜூனாவை போட்டியிட வைக்க வேண்டும் எனபதில் தெளிவாக இருக்கிறார். இந்த விஷயத்தில் தி.மு.க. கறாராக இருந்தால், அ.தி.மு.க. பக்கம் திருமா செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal