நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் முருகன், தற்போது மத்திய பிரதேசமாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக- திமுகவிற்கு மாற்றாக பாஜகவை உருவாக்க தேசிய பாஜக தலைமை தீவிரமாக முயன்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக தலைவர்களாக இருந்து வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு பதவிகள் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழிசை சவுந்திர்ராஜனுக்கு இரண்டு மாநில ஆளுநர் பொறுப்புகளை வழங்கியது. இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவராக சிறப்பாக செயல்பட்ட எல்.முருகனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கியது மட்டுமில்லாமல் மத்திய இணை அமைச்சர் பொறுப்பும் வழங்கியது. இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பாரக்கப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் அடிக்கடி நீலகிரி மாவட்டத்திற்கு சென்று பாஜகவினரை உற்சாகப்படுத்தியும், பொதுமக்களை சந்தித்தும் குறைகளை கேட்டு வந்தார். இந்தநிலையில் எல்.முருகனின் பதவி காலம் முடிவடையவுள்ளதால் மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவியை பாஜக தலைமை வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேசத்தில் இருந்து எல். முருகன், உமேஷ் நாத் மஹாராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

எல். முருகன் 1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த அவர், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அப்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தவர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற்த்திற்குள் 4 பாஜக எம்எல்ஏக்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ம.பி.யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிட பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal