ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகள் இணைப்பு தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் கே.என். நேரு தற்போது உள்ள தலைவர்களின் பதவிக்காலம் முடியும் வரை இணைக்கபடமாட்டாது என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போது, ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பது, பேரூராட்சியை நகராட்சியுடன் இணைப்பது மாநகராட்சியின் இணைப்பது என்பதெல்லாம் கடந்த காலத்தில் தீர்மானங்கள் போடப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், கமிட்டி விரைவில் கருத்துகளை தெரிவிக்கும் என்றார்.

அப்போது பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, எந்தெந்த பகுதிகளில் மாநகராட்சி நகராட்சி அருகிலுள்ள ஊராட்சிகளில் இணைக்கலாம் என்பது தீர்மானம் போட்டு அந்த தலைவர்கள் ஒப்புதலோடுதான் இணைக்கப்படும் என்றார். மேலும், இப்போது உள்ள தலைவர்கள் பதவி காலம் முடியும் வரை இணைக்கப்படாது என்றும் ஆய்வு செய்யப்பட்டு, பொது மக்களின் கருத்து கேட்டு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். எடுத்தவுடன் இணைக்க முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal