தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமைச் செயலகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார். உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுடன் முரண்படுகிறேன் என்று கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி 2 நிமிடங்களில் உரையை முடித்துக்கொண்டார். தமிழக அரசின் கொள்கை விளக்க உரையை கவர்னர் முழுமையாக படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். சபாநாயகர் வாசித்து வரும் உரையை, சட்டசபையில் அமர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டு வருகிறார்.