மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பார் என பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
அந்த வகையில், இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசத்தின் மனநிலை (The Mood of the Nation poll)) எனும் பெயரில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 28ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய சுமார் 35,801 பேர் மற்றும் சிவோட்டரின் வழக்கமான தரவுகளிருந்து எடுக்கப்பட்ட 113,081 நேர்காணல்கள் என மொத்தம் 149,092 பேரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என இந்தியா டுடே – சிவோட்டரின் தேசத்தின் மனநிலை கருத்துக்கணிப்பு கணித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சி பல சட்டமன்றத் தேர்தல்களிலும், 2019 மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு உதவியுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போவதாகக் இந்தியா டுடே – சிவோட்டக்ஷீ கருத்துக் கணிப்பு கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் மற்றொரு கேள்வி எழுந்துள்ளது. அது என்னவென்றால், மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பதுதான்.
எனவே, அதுகுறித்தும் இந்தியா டுடே – சிவோட்டரின் தேசத்தின் மனநிலை, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. அதன்படி, 29 சதவீதம் பேர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடிக்கு அடுத்தபடியாக பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், 16 சதவீதம் பேர் நாக்பூர் எம்.பி.யும், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி தொடர்பான பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியை பிடித்தார். அவரது இடத்தை நிரப்ப மற்றொருவர் மிகவும் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். பிரதமர் மோடி இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், பாஜகவை தேர்தல் அரசியலின் மையமாக மாற்றியவர் அமித் ஷா. பாஜகவின் சாணக்யா என அழைக்கப்படும் அவரது ராஜதந்திரங்கள், வியூகங்கள் பாஜகவுக்கு தேர்தல்களில் பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தது. பாஜகவின் எழுச்சிக்குப் பின்னால் அமித் ஷாவின் நுட்பமான திட்டமிடல், அரசியல் புத்திசாலித்தனம் இருந்தது.
உத்தரபிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக பணியாற்றி வரும் யோகி ஆதித்யநாத், கட்சிக்குள் விரைவாக வளர்ந்து கட்சியினரின் மரியாதையை பெற்றவர். இந்துத்துவ தலைவரான யோகி ஆதித்யநாத் சர்ச்சைகளுக்கு மட்டுமல்லாமல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததற்காகவும் பெயர் பெற்றவர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை பாஜகவின் அதிர்ஷ்டமான மாநிலமாக மாற்றிய பெருமைக்கும் சொந்தக்காரர்.
அரசியல் எல்லைகளை கடந்து பாராட்டைப் பெற்ற பாஜக தலைவராக நிதின் கட்கரி இருக்கிறார். பிரச்சனைகளைத் தீர்ப்பவராக அறியப்பட்ட நிதின் கட்கரி, மத்திய போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றி, நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை விரிவுபடுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களால் பாராட்டப்பட்டவர்.