சமீபத்தில் சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில், ‘இளைஞரணியினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள்’ என முதல்வரிடமே மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன் பிறகு அறிவாலயத்தில் டி.ஆர்.பாலுவின் புத்தக வெளியீட்டு விழாவில், ‘இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்… முதல்வரிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ என டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் மாநில இளைஞரணிச் துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், ஈரோடு பிரகாஷ் உள்ளிட்ட சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தி.மு.க. இளைஞரணியில் உதயநிதிக்கு அடுத்தாக இருக்கும் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தென் சென்னை அல்லது திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் மூத்த நிர்வாகிகள் பேசினோம். ‘‘சார், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடியில் ஜோயல் போட்டியிட முயற்சித்தார். அவருக்கு இளைஞரணி சார்பில் மேயர் பதவி கொடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்தார் உதயநிதி. ஆனால், சில அரசியல் காரணங்களால் அதுவும் நடக்கவில்லை. தூத்துக்குடி ஜோயலும் தற்போதுவரை பொறுமை காத்து வந்தார். இந்த நிலையில்தான், தென் சென்னை அல்லது திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் தூத்துக்குடி ஜோயல் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழை நகரையே புரட்டிப் போட்டது. அப்போது, அந்த மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு லட்சக்கணக்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைமையின் கவனத்தை ஈர்த்தவர் தூத்துக்குடி ஜோயல்.

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கண்ணசைவில் செயல்படுபவர்தான் எஸ்.ஜோயல். எனவே, தென் சென்னையாக இருந்தாலும் சரி, திருநெல்வேலி தொகுதியாக இருந்தாலும் சரி தூத்துக்குடி ஜோயல் போட்டியிடும் பட்சத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி’’ என அடித்துச் சொன்னார்கள் அறிவாலயம் தரப்பினர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal