தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திமுக ஆதரவாக செயல்பட்டதால் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியதை அடுத்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் தமிழக முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை என்றும் எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை விஜய் தெரிவித்திருந்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முதலில் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நடைபெற்றது. அதில் விஜய் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சினிமா படப்பிடிப்பில் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் பேசினார். அதில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து பில்லா ஜெகன் தவெக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதை அடுத்து புதிய மாவட்ட செயலாளராக அவரது சகோதரர் சுமன் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal