கடந்த 2011 ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் வாக்காளர்களுக்கு மு.க.அழகிரி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் திருஞானம் இறந்து விட்டார்.

மதுரையில் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து, 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரரான முக அழகிரிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal