பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.