காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பாரத ஒற்றுமை நீதி’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது. ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார்.

அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி
நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். மற்றொரு பா.ஜனதா தலைவர் சி.டி. பல்லவி கூறும்போது, “தற்போது அசாம் முதல்-மந்திரியாக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ராகுல்காந்தி அவமரியாதை செய்து தனது நாய் சாப்பிடும் அதே தட்டில் பிஸ்கட் சாப்பிட வற்புறுத்தினார்” என்றார்.

அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் பதில் கூறி இருப்பதாவது:- ராகுல்காந்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தாராலும் அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க அசாமியன் மற்றும் இந்தியன் ஆவேன். நான் சாப்பிட மறுத்தேன். காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன். கட்சி தொண்டருக்கு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட் கொடுத்த ராகுல் காந்தியின் இது போன்ற சம்பவம் தான் காங்கிரசை விட்டு வெளியேற செய்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். பா.ஜனதா வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி உள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal