நடிகர் விஜய் பற்றி அப்போது உதயநிதி சொன்ன விவகாரம்தான் இப்போது டிரெண்ட்டாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி தனது அரசியல் வருகையை அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் கட்சி கடும் போட்டியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக 2026-ம் ஆண்டு தேர்தல் உதயநிதி vs விஜய் என்று தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மறுபுறம் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதன்படி விஜய்யின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என கூறி இருந்த உதயநிதி, விஜய் பற்றி 13 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில், “காமெடி பண்ணாதீங்க ப்ரோ விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா” என பதிவிட்டிருக்கிறார் உதயநிதி. அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் போட்ட ட்விட் இது. அந்த சமயத்தில் நெட்டிசன் ஒருவர் நடிகராக நீங்கள் விஜய்க்கு போட்டியாக வருவீர்களா என்று கேட்ட கேள்விக்கு உதயநிதி விளையாட்டாக அளித்த பதில் தான் தற்போது அவருக்கு வினையாக மாறி இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக அந்த சமயத்தில் அரசியலுக்கு வரும் ஐடியாவிலேயே உதயநிதி இல்லை. தான் அரசியல் பக்கம் தலைகாட்டவே மாட்டேன் என்றெல்லாம் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அப்படி சொன்னவர் தற்போது அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அதுவும் 2026-ல் உதயநிதிக்கு விஜய் தான் கடும் போட்டியாக இருப்பார் என்று கூறப்படுவதால், அதனை கலாய்க்கும் வகையில் அவர் போட்ட பழைய ட்வீட்டை தற்போது வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.