அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைவது உறுதியாகிவிட்டது. இதற்கான தீவிர முயற்சியில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இறங்கியிருக்கிறார்.
பாமகவைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணிக்கு போவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் எனவும் கூறப்பட்டது. ஆனால் பாமகவுக்கான தொகுதிகளை ஒதுக்கும் போது திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படும்; விசிக வெளியேறும் என்கிற நிலையில் இயல்பாகவே அதிமுக கூட்டணியை வலிமைப்படுத்திவிடும் என்பது திமுகவின் வியூகம். அதனால் பாமகவை கூட்டணியில் திமுக சேர்க்கவில்லை.
இந்த கோபத்தில்தான் சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில் ராஜ்யசபா எம்பியான அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி எதுவும் தரவில்லையே என்கிற ஆதங்கத்தில் பாஜக அரசை கண்டித்தும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் அண்ணா திமுக கூட்டணிக்குதான் பாமக போகும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் பாஜக அணிக்கு கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் டெல்லி மேலிடம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழ் மாநில கனக்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்து பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்ற ஜிகே வாசன் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவை தக்க வைக்க ஜிகே வாசன் ஒருபக்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். பாமகவும் பாஜகவுடன் பல்வேறு சேனல்களில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த பின்னணியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாமகவை அதிமுக கூட்டணியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியாகவே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறதாம்.
மேலும் இந்த சந்திப்பின் போது பாமக கேட்கும் 6 தொகுதிகளை ஒதுக்கவும் அண்ணா திமுக தயாராக இருப்பதாகவும் சிவி சண்முகம் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதாம். ஆனால் பாமகவோ 8 முதல் 10 தொகுதிகளை அண்ணா திமுக கூட்டணியில் பெற வேண்டும் என விரும்புகிறதாம். இதனால் உடனடியாக சிவி சண்முகத்திடம் எந்த ஒப்புதலும் தரவில்லையாம் டாக்டர் ராமதாஸ். வழக்கம் போல பேசிவிட்டு சொல்லி அனுப்புகிறோம் என்கிற தகவலைத்தான் சிவி சண்முகமத்துக்கு பதிலாக தந்துள்ளாராம் டாக்டர்.
அநேகமாக ஓரிரு நாட்களில் அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி இறுதி அறிவிப்பும் வெளியாகும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.