சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியிடம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளிய உறவுக்கார பெண் மற்றும் தோழிகள் 2 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 10ம் வகுப்பு மாணவிக்கு அண்மையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் பதறிப்போய் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மாணவியை பலர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறி அதிர வைத்தார். மேலும் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் டாக்டர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், தனது மகளிடம் விசாரித்தார். அப்போது உறவுக்கார பெண் ஒருவர் மாணவியை மிரட்டி, ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளியதாக கூறினார். இதையடுத்து ஆட்டோ டிரைவரான சிறுமியின் தந்தை, கடந்த சனிக்கிழமை அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் புகார் அளித்தார். குழந்தைகள் நல காப்பகத்தின் விசாரணைக்கு பின்னர் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையை கழிக்க 10ம் வகுப்பு மாணவியை, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது உறவுக்கார பெண் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஆட்டோ டிரைவர். அந்த பெண், அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக கோயம்பேடு பஸ் நிலையம் அழைத்துச்சென்றாராம்.
அங்கு தயாராக இருந்த ஒருவரிடம் ரூ.10 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு மாணவியை அவருடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். அவர், மாணவியை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மீண்டும் கோயம்பேடு அழைத்து வந்து உறவுக்கார பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறார். அதன்பிறகு உறவுக்கார பெண் தனது தோழிகள் மேலும் 2 பேருடன் சேர்ந்து மாணவியை குன்றத்தூர், போரூர் பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பலருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்திருக்கிறார்.
இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதும், தற்போது கர்ப்பமாகி இருப்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியானது, இதையடுத்து காரப்பாக்கம் மாணவியை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கோயம்பேட்டைச் சேர்ந்த உறவுக்கார பெண் மற்றும் அவரது தோழிகள் துர்கா, காயத்ரி என 3 பெண்களை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விவரங்களையும் போலீசார் சேகரித்து அவர்களையும் தேடி வருகிறார்கள்..
இதனிடையே தனது மகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து போனதற்கு காரணமான உறவுக்கார பெண்ணை, மாணவியின் தந்தையான ஆட்டோ டிரைவர், ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் வெட்டினார். இதில் காயமடைந்த உறவுக்கார பெண், கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது தான் ஆட்டோ டிரைவர், தனது மகளை உறவுக்கார பெண்ணே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக போலீசாரிடம் கூறியதாகவும், ஆனால் அதுபற்றி அப்போது போலீசார் முறையாக விசாரிக்காமல் மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, நுங்கம்பாக்கம் குழந்தைகள் நல அலுவலகத்தில் தனது மகளுடன் சென்று நடந்ததை சொல்லி வேதனை பகிர்ந்துள்ளார் ஆட்டோ டிரைவர். அதன் பிறகு குழந்தைகள் நல ஆணையர்கள் அறிவுறுத்தலின் படியே கோயம்பேடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் பள்ளி மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவியின் தந்தை புகார் கூறிய அன்றே அந்த பெண்ணிடம் கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.