‘பொதுக்கூட்ட மேடைகளில் எனக்கு பட்டப் பெயர் வைத்து அழைக்கவேண்டாம்’ என தி.மு.க.வினருக்கு திடீர் கட்டளையிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை வேப்பேரியில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டனார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ‘‘சேலம் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள், எழுச்சி மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்டி இருக்கிறோம், தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது டாக்டர் கலைஞர் தான், இதை நோக்கித்தான் தேர்தல் இருக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி நாம் பெறுவோம் என்று தெரியும், நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். நாடாளுமன்றத் தேர்தலில் 40/ 40 வெற்றி பெற்று, தலைவரிடம் கொடுத்து விட்டால் ஒன்றிய அரசிடம் தெம்பாக சென்று தமிழகத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கலாம்.

கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம், தலைவர் அவர்கள் முதன் முதலில் போட்ட கையெழுத்து பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், இதன் மூலம் பெண்கள் மாதத்திற்கு 900 சேமிக்கிறார்கள், வருடத்திற்கு 12000 ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சிறு சிறு குறைகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், உங்கள் பகுதியில் சில பேருக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என புகார்கள் வந்துள்ளது. எனவே அதற்கான பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலரிடம் வழங்கி விடுங்கள், அதை சரி செய்ததற்கான முழு பணியில் நான் இறங்குகிறேன் என கூறினார்.

வெள்ள நிவாரணத்திற்காக மத்திய நிதி அமைச்சரிடம் நிதி கேட்டேன். அதாவது உங்க அப்பா வீட்டுக்காசா கேட்டேன் மக்கள் வரிப்பணத்தை கேட்டேன் என்று கூறினேன், உடனே அவர்கள் அமைச்சர் உதயநிதி மரியாதையாக பேச வேண்டும் என்று டெல்லியில் மீட்டிங்கில் தெரிவித்தார்கள். எனவே அவர்கள் கேட்ட மரியாதை நான் கொடுத்து விட்டேன் ஆனால் நான் கேட்ட நிதி இன்னும் தரவில்லை.

பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது என்னை தொண்டர்களும், நிர்வாகிகளும் பட்டப்பெயர் வெச்சு கூப்பிடுறீங்க.. அது உங்களுக்கு வேணும்னா சந்தோஷமா இருக்கலாம். ஆனால் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடே கிடையாது. நிகழ்ச்சிக்கு வருகின்ற போது பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை, சின்னவர் என்று கூப்பிடுவது, நான் சின்னவர் தான் உங்களை விட வயதில் சின்னவர். மேலும் வாழும் பெரியார் , இளைய கலைஞர் என்று கூப்பிடுகிறீர்கள்,

ஆனால் நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்க தான் ஆசைப்படுகிறேன் அதுதான் நிரந்தரம், தயவு செய்து பட்ட பெயர் வைத்து கூப்பிடுவது தவிர்த்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். மன்னிப்பு கேட்க முடியாது நான் கலைஞர் பேரன் வருவதை பார்த்துக் கொள்ளலாம்’’ என உதயநிதி தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal