என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கேட் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்று காலை அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்கினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் அண்ணாமலை வாணியம்பாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா, தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை மீது முட்டைகள் வீசபோவதாக கூறி கைகளில் முட்டைகளுடன் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் கண்டிப்பாக முட்டை வீசுவென். அதை தடுக்க கூடாதென்று அஸ்லம்பாஷா ஆக்ரோசமாக வீட்டில் நிறுத்தியிருந்த தன் கார் கண்ணாடி மீது முட்டைகளை தூக்கி வீசினார். அப்போது முட்டைகள் அங்கிருந்த காரின் கண்ணாடி மீது விழுந்தது. இதனையடுத்து போலீசார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அஸ்லாம்பாஷா தனது ஆதரவாளர்களுடன் வீட்டின் வாசற்படியில் அமர்ந்து கொண்டார்.
அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வாணியம்பாடியில் அண்ணாமலை நடை பயணத்தையொட்டி பா.ஜ.க.வினர் அவரை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர். வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள காதர் பேட்டை சாலையோரம் இருந்த வரவேற்பு பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதனைக்கண்ட பா.ஜ.க. வினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தகவலறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனரைக் கிழித்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.