2024- நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் இப்போதே அனைத்து தொகுதிகளிலும் தொற்ற தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக குறிப்பாக நீலகிரி தொகுதியில் அதன் விறுவிறுப்பு கூடியுள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மலை வெளியான நீலகிரியில் கூடலூர், ஊட்டி, குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும், சமவெளி பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.
கடந்த 2021- சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி, கூடலூர் ஆகிய 4 தொகுதிகளை அ.தி.மு.க.,வென்றது. குன்னூர், ஊட்டி ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளை மட்டுமே தி.மு.க., கூட்டணி வென்றது. இதனிடையே தற்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க் கொள்கிறது.
தி.மு.க.,வை பொருத்தவரை முன்னாள் மத்திய அமைச்சரும், தற் போதைய எம்.பி., ஆ.ராசா தான் போட்டியிடுவார் என உறுதி செய்யபட்டுள்ளது. அதே போல் பா.ஜ.க.,வில் தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தான் போட்டியிட போகிறார் என்கிற ரீதியில் இவ்விருவரும் பத்து நாளைக்கு ஒரு முறை நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குள் விசிட் அடித்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டனர்.
அமைதியாக இருந்து வந்த அ.தி.மு.க., தரப்பும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்து தங்களது தரப்பு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை மறைமுகமாக துவக்கி விட்டதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் பல தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்.
அதன்படி நீலகிரி தொகுதியில் தாயகம் திரும்பிய தமிழரும், கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சந்திர சேகர் கட்சிப் பணியாற்றுவதில் எடப்பாடியின் குட்புக்கில் இடம் பெற்றிருக்கிறார். இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் தொடங்கி தற்போது வரை சிறப்பாக கழகப்பணியாற்றி வருகிறார் சந்திரகேர். ஆரம்பம் முதலே அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான சந்திரசேகர் தற்போது கூடலூர் பேரூர் கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2022ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வின் அலை வீசியபோதும், இவரது மனைவி கவுன்சிலாக வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தயாகம் திரும்பிய தமிழரான பொன் ஜெயசீலன் வெற்றி பெற்றது போல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாயகம் திரும்பிய தமிழருக்கு வாய்ப்பு கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் அனைத்து தரப்பு மக்களும்!
ஆக மொத்தத்தில் ஆ.ராசாவை எதிர்த்து தாயகம் திரும்பிய தமிழர் ஒருவர் நீலகிரியில் போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டது.