மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசனை காணவில்லை என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருக்கையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதுதான் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையே முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மதுரையில் நடக்கும் அரசியல் கள நிலவரம் பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரையில் தி.மு.க.விலும் சரி அ.தி.மு.க.விலும் சரி கோஷ்டிப் பூசலுக்கு பஞ்சமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி.யானார். இவர் வெற்றி பெற்ற பிறகுதி தொகுதி பக்கம் அவ்வளவாக தலைகாட்டாவில்லை என்ற குற்றச்சாட்டை மதுரை மக்கள் அவ்வப்போது எழுப்பினர். தற்போது மீண்டும் ஆக்டிவ் அரசியலில் இறங்கியிருக்கிறார்.

காரணம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ‘லைம் லட்டுக்கு’ வந்திருக்கிறார். இந்த முறை இவர் போட்டியிட்டாலும் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள். இந்த நிலையில்தான், மதுரை வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள திருவிழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குளம் மாரியம்மன் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருவிழா தொடங்கி, ஜனவரி 25ஆம் தேதி விழா உற்சவமான தெப்பக்குள தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தெப்பக்குளம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இது குறித்து சு.வெங்கடேசனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன். எதிர் கட்சி எம்.பியை அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைந்துள்ளது மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்தேன். எதிரெதிர் அரசியலில் முகாம்களில் இருந்தாலும், நல்லதை பாராட்டும் அரசியல் நெறியை என்றும் காப்போம்“ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டிய விவகாரம்தான் உண்மையான அ.தி.மு.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது குறித்து சிலர் தங்களது வலைதள பக்கத்தில், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்ப அ.தி.மு.க.தான் காரணம் என நீங்களோ, உங்கள் கட்சியோ அதே அரசியல் நெறியோடு எங்காவது கூறியது உண்டா..?

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த தெப்பக்குளம் எப்படி பராமரிக்கப்பட்டது என்று எங்காவது சொல்லியிருக்கீறீர்களா? மதுரை மாவட்டத்திற்கு எத்தனையோ திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் கொண்டு வந்திருக்கிறார்கள். அது பற்றி செல்லூர் ராஜு ஒரு முறை கூட வாய்திறந்து பாராட்டியது கிடையாது.

தி.மு.க.வுடன் செல்லூர் ராஜுக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது என்று ரத்தத்தின் ரத்தங்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யை பாராட்டியதன் மூலம் அது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராக இருந்துகொண்டு எதிர்க்கட்சியினரை இப்படி பாராட்டினால், சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எப்படி மனதார வேலை பார்ப்பார்?

மதுரை மாவட்ட தி.மு.க.வில் நடக்கும் ‘உள் பாலிடிக்ஸால்’ அக்கட்சியினரே அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை செல்லூர் ராஜு மனம் விட்டுப் பாராட்டியிருப்பது அ.தி.மு.க.வினைரை கொதிப்படைய வைத்திருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பெரிதாக மக்கள் பணிகளில் ஈடுபடாத சு.வெங்கடேசனை, தெப்பக்குளத்தில் ஒரு லைட் போட்டதற்காக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பாராட்டியிருப்பதுதான், அ.தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மதுரை மாவட்ட அ.தி.மு.க.வில் மா.செ. மாற்றம் நடந்தால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யை தி.மு.க.வே பாராட்டாத நிலையில், அ.தி.மு.க. மாஜி பாராட்டியிருப்பதுதான் அ.தி.மு.க.வினரை கொந்தளிக்கவும், தி.மு.க.வினரை தத்தளிக்கவும் வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal