வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில், திமுக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீட்டு குழு மற்றும் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 10 இடங்கள் கொடுக்கப்பட்டது. எனவே தற்போது 12 இடங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால் திமுகவோ 7 இடங்களை கொடுக்கவே திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது தாங்கள் விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த எந்த தொகுதி என்ற பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக இரண்டு தரப்பில் இருந்தும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 3-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுடனும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோடும் அப்போது பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிகிறது.

மேலும் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதே போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெறவுள்ளது. எனவே இந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்களை கொடுக்கப்படும் என்ற தகவல் திமுக வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 7 முதல் 8 தொகுதியும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதியும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதியும் அதில் ஒரு தொகுதி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இதே போல மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு ஒரு தொகுதியும் வழங்கப்பட உள்ளது. கம்லஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு தென் சென்னை மற்றும் கோவை தொகுதி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal