சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி, இடைக்கால தடைகேட்டு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்பு இடைக்கால தடை விதிப்பது குறித்து பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொன்முடி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.