நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. யாருடன் கூட்டணி அமைப்பது? பேச்சு வார்த்தைக்கு வரும் கூட்டணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவது எப்படி என்றும் அதிமுக குழு இன்று ஆலோசிக்கிறது. கடந்த தேர்தல்களில் ஜெயலலிதாவின் முடிவுகள் எப்படி இருந்ததோ, அதே பாணியை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டில் அதிமுகவும், திமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அறிவித்துள்ளன. அந்த குழுக்கள் தங்களுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த வாரம் கூடி ஆலோசனை நடத்தியது.

தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று கூறியுள்ளனர் தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள்.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக பிரச்சார குழு, தேர்தல் விளம்பர குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இம்முறை தேர்தல் பிரச்சாரக் குழுவை வலுப்படுத்தி உள்ளது அதிமுக. தேர்தல் வெற்றிக்கு பிரச்சாரம் மிக முக்கிய பங்கு வகிக்கும். வாக்காளர்களிடம் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு பிரச்சார குழுவிற்கு உண்டு எனவே லோக்சபா தேர்தலுக்கான பிரச்சார குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் இடம்பெறும் மூத்த தலைவர் தம்பிதுரைக்கு இப்போதும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் தேர்தல் பிரச்சார குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜு, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் என் ஆர் சிவபதி ஆகியோர் பிரச்சார குழுவில் இடம் பிடித்துள்ளனர் இந்த குழுவினர் இன்றைய தினம் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான வகுக்கப்படும் வியூகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையில் தேர்தல் விளம்பரங்களை மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் 10 பேர் கொண்ட விளம்பர குழுவும் அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கே.டி, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் புதிதாக முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் வி.பி.பி பரமசிவம், இன்பதுரை ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் லோக்சபா எம்.பி வேணுகோபால் இம்முறை தேர்தல் விளம்பர குழுவில் இடம் பெற்றுள்ளார், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தோரின் பிரதிநிதிகளாக முன்னாள் அமைச்சர்கள் அப்துல் ரஹீம் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவைதவிர இளம் வாக்காளர்களை இணையம் மூலம் கவரும் வகையில், கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யனும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உடன்படிக்கை குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

பாஜகவுடன் கடந்த 5 ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக, சில மாதங்களுக்கு முன்பாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக அறிவித்து விட்டார். இந்நிலையில், புதிய கூட்டணியை வலிமையாக உருவாக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக தங்கள் அணிக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. அது தவிர யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்று அதிமுக கணக்கு போட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பெரிய கட்சிகள் எதுவுமே இல்லாமல் 40 தொகுதிகளிலும் இரட்டை இலையை மட்டுமே முன்னிறுத்தி தேர்தலை எதிர் கொண்டார் ஜெயலலிதா அதே போல இந்த முறையும் முயற்சி செய்யலாம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal