இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால் மற்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்கினார். பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்க உள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் நிதிஷ்குமார் இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal