திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அரிவாளால் வெட்டிய திருப்பூரை சேர்ந்த சரவணன் (வயது 23), ஈரோட்டை சேர்ந்த பிரவீன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கைதான 2 பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர.