நடிகர் மன்சூர் அலிகான் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார். இந்த நிலையில் கட்சியின் பெயரை தற்போது இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் தேசிய புலிகள் என பெயரிடப்பட்ட நமது கட்சி இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சாதி வெறியை நீக்கி, கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.
தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம் நாம் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிப்பேன் என்றார்.
மன்சூர் அலிகானிடம் விஜய்-யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு சீமான், கமல், சரத்குமார், விஜயகாந்த் இன்னும் பிற நடிகர்களுக்கு முன்பே நான் அரசியலில் களம் கண்டவன். எனக்கு யாரும் போட்டி கிடையாது. யாருக்கும் நானும் போட்டி கிடையாது. மக்கள் நலனே முக்கியம் என்று கூறினார்.