மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

பாஜகவுக்கு எதிராக எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணி என பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளில் கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து, இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டணி கட்சிகளாகம் ஆம் ஆத்மி, திரிணாமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் போக்கு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மம்தா பானர்ஜி அதிரடியாக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொகுதி பங்கீடு பேசுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் தங்களது கட்சி பல்வேறு முன்மொழிவுகளை வைத்ததாகவும், அது அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரிடமும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இருப்பினும், எங்களது கட்சி காங்கிரஸுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தது, அது உடனடியாக நிராகரிக்கப்பட்டது. எனவே, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் தனித்து 300 தொகுதிகளில் போட்டியிடட்டும். பிராந்தியக் கட்சிகள் ஒன்றாக இருப்பதால் மற்ற இடங்களில் போட்டியிடலாம். இருப்பினும், காங்கிரஸின் எந்த தலையீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். “எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிற பகுதிகளில் நடப்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்குவங்கத்தில் நாங்கள் தனியாக பாஜகவை தோற்கடிப்போம் எனவும் மம்தா சூளுரைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் தான் உள்ளது என தெளிவுபடுத்தியுள்ள மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்தும் தனது அதிருப்தியை மம்தா பானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். “ராகுல் காந்தியின் யாத்திரை மேற்குவங்கம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி’ என ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி எனக்கு நெருக்கமான தலைவர் என ராகுல் காந்தி நேற்று கூறியிருந்த நிலையில், தனித்து போட்டியிடுவதாக மம்தா அறிவித்துள்ளார். சோனியா காந்தியுடன் நல்லுறவை பேணி வரும் மம்தாவுக்கு ராகுல் காந்தியுடனான டேர்ம்ஸ் சரியில்லை என கூறப்படுகிறது.

அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முன்வந்துள்ளார். ஆனால், இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டதாக தெரிகிறது. கடந்த தேர்தல்களை சுட்டிக்காட்டி 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிராகரித்த காங்கிரஸ் கட்சி, 10 முதல் 12 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட விரிசலால் தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை தோளில் சுமக்க விரும்பவில்லை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி! அதே போல் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு நிலைமை ஏற்படுமா என எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பி.ஜே.பி.யின் மீதான கோபப் பார்வையில் இருந்து தப்ப, காங்கிரஸை பல மாநிங்களில் கழற்றி விடுவதாக தகவல்கள் கசிகிறது. தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal