வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் முனைப்புடன் களத்தல் இறங்கியிருக்கின்றனர். தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
என்.ஆர்.சிவபதி
இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவில், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவில் இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்கான குழுவில், டாக்டர் மு.தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் கே.ராஜூ, ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ்.கோகுலஇந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான குழுவில், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் பி.வேணு கோபால், டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, எஸ்.அப்துல்ரஹீம், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு கட்சியின் உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை மேற்கொள்வதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன் இடம் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில் நுட்ப அணியை மிகவும் சிறப்புடன் வழிநடத்தி சென்றுகொண்டிருக்கிறார் ராஜ் சத்தியன். இவர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாகவும், நிழலாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் எடப்பாடி பழனிசாமியை ‘மாமா’ என்று உரிமையுடன் அழைக்கும் என்.ஆர்.சிவபதியும் தேர்தல் பிரச்சார பணிக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.