அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும். இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள் உள்பட நவரத்தினங்களும் இடம் பெற்றுள்ளன. 18,567 சிறிய வட்ட வடிவ வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 3 ஆயிரம் நவரத்தின கற்கள் அந்த மாலையில் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
அதுபோல 5 அடுக்கு கொண்ட நெக்லசும் ராமரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்தது தவிர அயோத்தி ஆலய நிர்வாகம் சார்பிலும் ராமருக்கு பல்வேறு நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர் இந்த நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். நெற்றிசுட்டி, இரண்டு கைகளிலும் அணியும் அணிகலன்கள், இடுப்பில் கட்டப்படும் அலங்கார நகைகள், கிரீடங்கள் என ராமருக்கு விதவிதமான நகைகளை தயார் செய்து உள்ளனர். 500 கிராம் எடை கொண்ட சிறிய நெக்லஸ் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ராமருக்கு அணிவிக்கப்படும் தங்க மாலைகளில் விஜய்மாலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தங்க மாலை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும். ராமர் கையில் வைத்திருக்கும் அம்பு-வில் ஒரு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையில் போட்டுள்ள வளையல்கள் 850 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அவை 560 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ராமருக்கு கையில் அணிவிக்கப்படும் மோதிரங்களும் பல்வேறு வகையான நவரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளன.