நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழுவை அமைத்துள்ளது அதிமுக.
மேலும், தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால் ஆகியோர் அடங்கிய தேர்தல் பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், விபிபி பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலட்சுமி ஆகியோர் அடங்கிய தேர்தல் விளம்பர பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவில் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும், இளைஞருமான ராஜ் சத்தியன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.