திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் கட்சிக் கொடியேற்றத்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தி.மு.க கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் லட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்தற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். “திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் அன்பும் நன்றியும்” என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி மாநாட்டுக்கு வாழ்த்து கூறி பேசும் வீடியோ பதிவு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. என் தாய்வீட்டில் இருக்கிற தம்பிமார்களே.. அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான்.
தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணமே இளைஞரணிதான். என்னை உழைக்க வைத்து உற்சாகமூட்டியது இளைஞரணியிர் தான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி எப்போதும் இருப்பதால் தான் நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். ஏராளமான தளபதிகளை உருவாக்கிய, உருவாக்குகிற ஈடு இணையற்ற அணி தான் இளைஞரணி.
இன்றைக்கு இளைஞரணியை வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். திமுகவில் இளைஞரணி என்ற ஒன்றை உருவாக்க கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் நினைத்தார்கள். ஏராளமான இளைஞர்கள் திமுகவில் சேருவதால் அவர்களை வழி நடத்த வலிமையான இளைஞரணி வேண்டும் என்று நினைத்தார்கள். 1980ஆம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி தொடங்கப்பட்டது அதுவே முதல்முறை. இளைஞரணிக்கு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு 1981ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. 1983ம் ஆண்டு இளைஞரணியின் இரண்டாவது ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திமுக இளைஞரணிக்கு 5 பேர் கொண்ட அமைப்புக்குழு 1983ல் ஏற்படுத்தப்பட்டது. அதில் நானும் இடம்பெற்று இருந்தேன். அன்றில் இருந்துதான் இளைஞர் படையை வழிநடத்தும் பெரும் பொறுப்பு என்னிடம் சேர்ந்தது. திமுக இயக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணி தான் அடித்தளம் அமைத்தது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.