நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார்.அதே நேரத்தில் காயத்ரி பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கும் அப்போதய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார். அதற்கு அடுத்த நாளே தான் பாஜகவில் நீடிப்பதாக கூறினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது காயத்ரி ரகுராமிற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்குப்பிறகு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு காயத்ரி ரகுராம் ஓரங்கட்டப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த காயத்ரி ரகுராம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். கட்சியில் இணைந்த நாளில் இருந்தே பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். வெளிநாட்டில் சிக்கித்தவித்த பல தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறேன். என்னுடைய சொந்த செலவில் நான் பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். நான் கடந்த 8 ஆண்டு காலமாக கடன் வாங்கி உதவி செய்திருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி என்னை பாஜகவை விட்டு நீக்கியது வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சனம் செய்தது வந்தார். இந்த நிலையில் திடீரென திருமாவளவனை சந்தித்து வாழ்த்து கூறினார். அவர் வேறு அரசியல் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறியதுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை கூறிய காயத்திரி ரகுராம், அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு இன்னும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிடுவார் என்கிறார்கள். காயத்திரி ரகுராம் அண்ணாமலைக்கு எந்தளவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!