பாராளுமன்றத்துக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும். இதையடுத்து தேர்தலை சந்திக்க ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் பொங்கலுக்கு பிறகு குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க.வில் 3 குழுக்கள் அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒரு குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு குழுவும் என்று மொத்தம் 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொகுதி பங்கீடு குறித்து பேசும் குழுவுக்கு தலைவராக இருப்பார்.
5 பேர் அதில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமாறு:- அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஆ.ராசா எம்.பி. இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர் பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தலைமை-கனிமொழி கருணாநிதி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் அதில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழமை கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தவும் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுக்களுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அஜய்குமார் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தி.மு.க.வுடன் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது பற்றி முடிவு செய்யப்படும். அதன் பிறகு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குழுக்கள் சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும். அடுத்த வாரம் இந்த குழுக்கள் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தி.மு.க.-காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெளிவாக தெரிய வரும்.