மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வருகிற 19 மற்றும் 21-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (19-ந்தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஏ.இ.கோவில் சந்திப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும்  பணி நடந்தது. அதில் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் ‘கேலோ’ இந்திய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார். இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம்  பேர் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முழு அளவிலான போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal