வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதற்கிடையே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின. நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கார்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal