பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, 3 தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தென் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 பாராளுமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை தி.மு.க. கூட்டணியில் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த 3 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார்கள். மதுரை, கோவை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செயலாற்றி வருகிறார்கள் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ள நிலையில் இந்த கட்சிகளுக்கும் அவர்கள் கேட்கும் சீட்டை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.

தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே கூட்டணி கட்சிகள் கேட்பதால் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவை அறிவிக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள்
வெளியாகின்றன. அப்படி ஒதுக்கப்படும் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal