ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது:- ‘எந்த ஊருக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஓசூருக்கு உண்டு. இங்கு தான் குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. தி.மு.க. என்ற தீய சக்தியை அடியோடு வேறறுப்பது தான் என் மண் என் மக்கள் பயணத்தின் நோக்கம்.

பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல், இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல். பிரதமர் மோடியை 3-வது முறை பிரதமராக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். 150-வது சட்டமன்ற என் மண் என் மக்கள் யாத்திரை, ஓசூரில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது’. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஓசூர் ஜி.ஆர்.டி சர்க்கிளில் இருந்து அண்ணாமலை திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal