தி.மு.க. ஆட்சியில் கடுமையாக விலைவாசி ஏறியிருப்பதை கண்டித்து, தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது தொடர்பாக திருச்சியின் முன்னாள் எம்.பி.ப.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்
இந்த நிலையில்தான், விடியா ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் விரோத போக்கு, மற்றும் பெருகிவரும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிய மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, முதற்கட்டமாக 21.01.2024 அன்று நடைபெறவுள்ள தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் நடேசன், அசோகன், சிவக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண்நேரு, நகர கழக செயலாளர் பொன்னி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் மறைமுகமாக உயர்த்தப்பட்ட வரிகள், பத்திரப்பதிவு கட்டணம், அத்தியாவசிய பொருட்களான பால்விலை உயர்வு உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் குமார் எம்.பி. வலியுறுத்தியிருக்கிறார்.