டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இந்த திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்குப் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நெல்லை நடைபெற்றது. இந்த நிலையில் இளைஞரணி 2 வது மாநில மாநாடை சேலத்தில் கடந்த 2023 டிசம்பர் 17 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட உள்ளது. ஒருநாள் இது ஏற்பாடு செய்யப்பட்ட இது, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்ததால் 4 மாவட்டங்கள் வெள்ளக் காடாகின.
அந்த துயரம் துடைக்கப்படுவதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட தேதியை வெளியிட்டு உள்ளது அக்கட்சித் தலைமை.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வருகிற 21.01.2024 ஞாற்றுக்கிழமை அன்று சேலத்தில் நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மாநாடு பற்றி தெரிவிக்கையில், “தேர்தல் களத்திற்கான பயிற்சிக் களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டின் வெற்றி, அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்ச்ர உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறாரா என்பது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம்.
‘‘சார், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றப் பிறகு கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவரது பங்கு என்பது மிக முக்கியதும். ஒவ்வொரு விஷயத்தை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சியை முதல்வர் திறந்த வைப்பதாக இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வர் இடத்தில் இருந்து புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள சுமைகளை, உதயநிதி ஸ்டாலின்தான் பாதி சுமந்து வருகிறார். இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு துணை முதலமைச்சராக பதவியேற்றவுடன், கிட்டதட்ட முழு பொறுப்பையும் விரைவில் ஏற்பார். இது பற்றிய விமர்சனங்கள் இப்போது வேண்டாம். அவரது செயல்பாடுகளைப் பார்த்து வையுங்கள்’’ என்று உதயநிதியின் மீதான நம்பிக்கைகளை நம்மிடம் வெளிப்படுத்தினர்.
ஆக மொத்தத்தில் இளைஞரணி மாநாடு முடிந்தவுடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகை சூடுவது உறுதியாகிவிட்டது.