முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் ஒரு டிரில்லியன் கனவுகள் ஆகிய பரப்புரைகள் பரவலான ஆர்வத்தை மூட்டியுள்ளன. 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 உலக நாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.
தலைமைப் பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சி அரங்குகள், தமிழ்நாட்டின் தொழில் சூழலுக்கான காட்சி அரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சி அரங்குகள், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு காட்சி அரங்குகள் என எங்கள் மாநிலத்தின் விந்தையைக் காணவும், தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இந்த மாநாடு வழங்கும். தமிழ்நாட்டின் தொழில் மரபை கொண்டாடி தமிழகம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.