சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது. மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது.

சில மாநிலங்களுக்கு அதிகமான வரி வருவாய் கொடுக்கப்படுகிறது. பா.ஜ.க.ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை. நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.

இத்திட்டத்திற்கு வெறும் 3,273 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal