அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் தடையில்லையென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மது விலக்கு துறையானது மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் போது அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென தெரிவித்தனர். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சரியானது எனவும் கூறினர். செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எந்தவித தடையுமில்லையென தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal